சென்னையில் வாழ்ந்து மறைந்த ஜோ பைடனின் தாத்தா!

joe biden

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் மூதாதையர்கள் சென்னையில் வாழ்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், அதுகுறித்த ஆய்வை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தொடங்கியிருக்கின்றனர்.

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் இருக்கும் கல்லறைக்கும், கடல் கடந்து, கண்டங்களைக் கடந்து இருக்கும் அமெரிக்காவுக்கும், நூற்றாண்டுத் தொடர்பு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படித்தான் கூறுகிறது புனித ஜார்ஜ் பேராலயத்தில் இருக்கும் ஆவணங்கள்.

ஆயிரத்து 868ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்ட இந்த கிறிஸ்டோஃபர் பைடன்தான், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனின் தாத்தாவுக்கு தாத்தாவாக இருக்கலாம் என்ற சுவாரஸ்யத் தகவலைக் கூறுகிறார் பேராயர் ஜார்ஜ் ஸ்டீஃபன்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கேபினட்டில் ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது, ஒருமுறை இந்திய சுற்றுப் பயணமாக மும்பை வந்திருந்தார்.

அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது மூதாதையர்கள் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர்கள் என்றும் கூறியதுதான், இதுகுறித்த தேடலை அதிகரித்திருக்கிறது.

அதனடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், கிறிஸ்டோஃபர் பைடன் என்பவர் கிழக்கிந்திய கம்பெனியில் மாலுமியாக பணியாற்றியதற்கும், புனித ஜார்ஜ் பேராலயத்தில் உறுப்பினராக இருந்ததற்கும், அங்குள்ள குறிப்பேட்டில் ஆவணங்கள் உள்ளன.

சுமார் 19 ஆண்டுகள் சென்னையில் வசித்த கிறிஸ்டோஃபர் பைடன், அங்கேயே வாழ்ந்து மறைந்ததற்கு, பேராலயத்தில் அவரின் பெயரில் பொறிக்கப்பட்டுள்ள கற்பலகையும், கல்லறையுமே அழியா சான்றாக இன்றும் காட்சியளிக்கின்றன.

உண்மையில் கிறிஸ்டோஃபர் பைடன்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தாத்தாவுக்கு தாத்தாவாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக பேராயலத்தில் இருக்கும் ஆவணங்களையும், கிறிஸ்டோஃபர் பைடனின் கல்லறை குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட கமலாதேவி ஹாரிஸ், அமெரிக்கத் துணை அதிபராக தேர்வானதை கொண்டாடிவரும் தமிழக மக்களுக்கு, அதிபரும் நம்ம ஊர்காரர்தான் என்பது பெருமை தரக்கூடிய தருணமே!

இதையும் படிக்கலாமே: ஒபாமா எழுதிய ‘தி பிராமிஸ்டு லாண்ட்’!இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து விமர்சனம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts