கொரோனா தடுப்பு மருந்து குறித்து நல்ல செய்தி கிடைச்சிருக்கு: அதிபர் ட்ரம்ப்

கொரோனா தடுப்பு மருந்து குறித்து நற்செய்தி வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன. இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

trump

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம், எம்.ஆர்.என்.ஏ-1237 என்ற கொரோனா தடுப்பு மருந்தை தன்னார்வலர்களிடம் பரிசோதனை செய்தது. அதில் சோர்வு, தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை மருந்து உருவாக்குவதாக தெரியவந்துள்ளது. இரண்டு கட்ட பரிசோதனை முடிவடைந்த நிலையில், வருகிற 27ஆம் தேதி மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற உள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில் தடுப்பு மருந்து குறித்து நல்ல செய்தி கிடைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் அமெரிக்க முன்னேறியுள்ளது என்பதை ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.