160 ஆண்டுகளில் இல்லாத புயல்… லூசியானாவை புரட்டி எடுத்தது!

strom

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை புயல் தாக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கேம்ரான் என்ற இடத்தின் அருகே அந்த புயல் கரையை கடந்தபோது மணிக்கு  240 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன. ஏற்கன்வே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாகாணத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், ஆபத்தான இடங்களில் வசிப்பவர்கள் அரசின் முகாம்களில் தஞ்சமடையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 160 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

கடும் புயலை தொடர்ந்து லூசியானாவில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் ஜூலை மாதம் 22 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதேபோல் அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜூலை 25 ஆம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் ஹெனா என்ற புயல் சூறாவளியாக வலுப்பெற்று அச்சுறுத்தியது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் புளோரிடாவை “ஐசாயாஸ்” என்ற புயல் தாக்கியது குறிப்பிடதக்கது. ஒரு புறம் கொரோனா மறுபுறம் இயற்கை பேரிடர்கள் என அமெரிக்க மக்கள் ஏராளமான பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர்.