நான் அதிபரானால் ஹெச்1-பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாட்டை நீக்குவேன்- ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இணையம்வழியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் முயற்சியில் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இதற்காக டிஜிட்டல் பிரசார கமிட்டியை நியமித்த ஜோ பிடன், அதன் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேதா ராஜ் என்பவரையும் நியமித்துள்ளார்.

இந்நிலையில் வாஷிங்டனில் ஆசிய அமெரிக்கா மற்றும் பசிபிக் ஐலாண்டர் (ஏஏபிஐ) சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன், “அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று நான் அதிபரானால் 100 நாட்களுக்குள் ஹெச்1-பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவேன். அமெரிக்காவுக்குள் குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளின் மக்கள் வந்து செல்வதற்காக விதிக்கப்பட்டிருக்கும் தடையை முற்றிலும் நீக்குவேன். அமெரிக்காவை கட்டமைப்பத்தில் வெளிநாடுவாழ் அமெரிக்கர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதிபர் ட்ரம்பின் குடியேற்றக்கொள்கை மிகவும் கொடூரமானது. மனிதத்தன்மை இல்லாதது. கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை உடனடியாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்குவதையும் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். தகுதியுடைய அனைவருக்கும் க்ரீன் கார்டு வழங்கப்படும்.

என்னுடைய குடியேற்றக் கொள்கை உயர்ந்த ஊதியம் கொண்டவர்களுக்கு சாதகமாக இல்லாமல், குறைந்த ஊதியம் கொண்டவர்களுக்கே சாதகமாக இருக்கும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெறுவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்” என தெரிவித்தார்.