அமெரிக்க விவசாய துறையில் இந்திய பெண்ணுக்கு பதவி!

bidisha

அமெரிக்க விவசாயத் துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியான பிடிஷா பட்டாச்சார்யா என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், அமெரிக்க விவசாயத்துறையின் கீழ் வரும், பண்ணை சேவை முகமையின், மூத்த கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியான பிடிஷா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இவர், அமெரிக்க வளர்ச்சிக்கான மையத்தின், பருவநிலை மற்றும் எரிசக்தி கொள்கை துறையின் இயக்குனராக பணியாற்றியிருந்தார்.

bidisha

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற பிடிஷா, பருவ நிலை மற்றும் எரிசக்தி துறை நிபுணராக ஜொலித்தவர்.

மின்னிசொட்டா மாநிலத்தின் செனட்டர், அல் பிராங்கனின் எரிசக்தி மற்றும் விவசாய கொள்கை ஆலோசகராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் சூரியசக்தி மின்சாரம் அமைப்பது தொடர்பான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பிடிஷா போன்று இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்த ஏராளமான திறமைசாலிகளை உயர் பதவிகளில் வைத்து அழகு பார்த்துவருகிறார் அதிபர் ஜோ பைடன்.