மாற்றங்கள் கண்ட அதிபர் பதவியேற்பு விழா!

Joe biden- kamala harris

கொரோனா பெருந்தொற்று மற்றும் ட்ரம்பின் பிடிவாதம் காரணமாக அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் பல மாற்றங்கள் இருக்க போகின்றன.

ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் நாளை அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கிறார்.

அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் வயதான நபர் ஜோ பைடன். வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில், பதவி முடியும் அதிபர் , புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்தளிப்பார்.

பின்னர் இவர்கள் இணைந்து சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பர். 2017ஆம் ஆண்டு ஒபாமா, ட்ரம்புக்கு விருந்தளித்தார். ஆனால் இம்முறை அவ்வாறு நடைபெற சாத்தியமில்லை. ஏனெனில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

நாளை காலையிலேயே அவர் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 152 ஆண்டுகளில் , பதவி காலம் முடியும் அதிபர் , புதிய அதிபரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதன்முறை.

President-elect Joe Biden with Vice President-elect Kamala Harris. (File photo/AP)

வழக்கமாக பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். நகரம் முழுவதும் அதிபரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். ஆனால் ஜனவரி 6ஆம் தேதி நடந்ததை போன்ற வன்முறை மீண்டும் நிகழாமல் தடுக்கும் வண்ணம், வாஷிங்டன் நகரமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை.

வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொள்கின்றனர். முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் லேடி காகா தேசிய கீதம் பாட இருக்கிறார். இது தவிர ஜெனிபர் லோபஸின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

1949க்கு பிறகு முதன்முறையாக பதவியேற்பு விழாவுக்கான நடன நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக நடன நிகழ்ச்சி நடைபெறும் வால்டர் இ வாஷிங்டன் மையம் , கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஜோ பைடனுக்கு , உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸும், கமலா ஹாரிஸுக்கு நீதிபதி சோடாமேயரும் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர்.

வழக்கமாக நடைபெறும் அணிவகுப்புகள் மற்றும் பிற இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் இம்முறை ஆன்லைனில் நடைபெறும் என்றும் லைவ் ஸ்டீரிமிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: நாடாளுமன்ற வன்முறையில் சிலரை பணயக் கைதியாக பிடிக்க திட்டம்?