ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஜோ பிடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகமே உற்று நோக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.கொரோனா பரவலுக்கு மத்தியிலும் அதிபர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஜோ பிடன் பங்கேற்கவில்லை. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனே வேட்பாளர் என்பது அறியப்பட்டாலும் கட்சி மாநாட்டில் அவரே வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜிம்மி கார்டர், முன்னாள் அமைச்சர் கோலின் பாவெல் ஆகியோர் ஜோ பிடனை வேட்பாளராக முன்மொழிந்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காணொலி மூலம் வேட்பாளர் அறிவிப்பு நடைபெற்றது. 50 மாகாணங்களை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் ஜோ பிடனுக்கு தங்களின் ஒருமித்த ஆதரவை தெரிவித்தனர். முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, செனட் உறுப்பினர் பெர்னி சேண்டர்ஸ் ஆகியோரும் ஜோ பைடனுக்கு ஆதரவாக பேசினர். மிச்செல் ஒபாமா, பில் கிளிண்டன் ,ஜிம்மி கார்டர் உள்ளிட்டோரின் காணொலிகள் வேட்பாளர் அறிவிப்பின் போது ஒளிபரப்பபட்டன. தற்போதைய சூழலில் வெள்ளை மாளிகையின் மதிப்பை மீட்டெடுக்க வேண்டும் அதற்கு சக்திவாய்ந்த ஒருநபரை அதிபராக்க வேண்டும் என இவர்கள் அனைவரும் வலியுறுத்தினர். அதிபர் ட்ரம்பின் செயல்பாடுகளை கடுமையாக இவர்கள் விமர்சனம் செய்தனர். இனி வரும் நாட்களில் பரப்புரைகளில் இருதரப்பினரும் மோதி கொள்வர் என்பதால் அமெரிக்கா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.