குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணி அமர்த்துவதை தடுக்கும் மசோதா அமெரிக்காவில் தாக்கல்!

H-1B visas

ஹெச்1 பி விசாவை பயன்படுத்தி குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்துவதை தடுக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டவர்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுவதற்காக அமெரிக்க அரசு ஹெச்1பி, ஹெச்2 பி, எல்1 உள்ளிட்ட விசாக்களை வழங்குகிறது.

இவற்றில் ஹெச்1பி விசா இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலமானது. குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.

அதாவது ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த விசா வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் இரண்டே கால் லட்சம் பேர் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விசா வாயிலாக, வெளிநாட்டினரை, குறைந்த சம்பளத்தில் பணியில் நியமிப்பதாக, அமெரிக்க நிறுவனங்கள் மீது, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், குடியரசு கட்சி எம்.பிக்களான ப்ரூக்ஸ், கேட்ஸ், லான்ஸ் கோடன் ஆகியோர் இணைந்து மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மசோதாவில், ஹெச்1 பி விசாவை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்துக்கு பணியில் அமர்த்துவதாகவும், இதனால் வெளிநாட்டினர் மட்டுமின்றி அமெரிக்கர்களும் பாதிக்கப்பட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் ஹெச்1 பி விசா மூலம் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தும், நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களுக்கு அமெரிக்கர்களை விட அதிக சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.