இந்தியாவிற்கு செல்வதை தவிர்க்கவும்- அமெரிக்க அரசு அறிவுறுத்தல்

இந்தியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலிருந்து மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் மீண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் எல்லைகளை திறந்துள்ளது. சுமார் 4 மாதங்களுக்கு பின் 14 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு புதிய அறிவுறுத்தல்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. இதில் பயணம் தவிர்க்கப்பட வேண்டிய நாடுகள் பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனா உள்ள அதே பிரிவில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா செல்லும்பட்சத்தில் பல்வேறு வகையான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்தமாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதிப்பு காரணமாக பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலிருந்து அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: டிக்டாக், வீசாட் நிறுவனத்துடன் பரிவர்த்தனை வைத்துக்கொள்ளக்கூடாது: ட்ரம்ப்