அமெரிக்கா போனாலும் தாயகத்தை மறக்காத நெஞ்சம்! அமெரிக்கா டூ இந்தியா… கல்வியை கடத்தும் கதாநாயகன்!!

இந்தியாவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்காத எட்டாக்கனி ’தரமான கல்வி’… பணக்கார குழந்தைக்கு கிடைக்கும் கல்வி, சாதாரண ஏழை குழந்தைக்கு கிடைப்பதில்லை. கல்வியிலும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு! ஒரே மாதிரியான கல்வியை இந்திய மாணவர்கள் திறம்பட கற்கவேண்டுமென்ற முயற்சியில் இறங்கியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பள்ளி மாணவர் ஆதித்யா. இவரின் பூர்வீகம் இந்தியா என்றாலும் தற்போது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து, அங்கேயே பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். கொரானா விடுமுறையை பயனுள்ளதாக்க நினைத்த ஆதித்யா, அமெரிக்காவில் உள்ள சில ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக டியூஷன் எடுத்தார். அதனை பார்த்த அவரது தாய் காயத்ரி, இங்கு கிடைப்பது போன்ற தரமான கல்வி, இந்தியாவில் ஏராளமான குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என எதார்த்தமாக கூற, அதனை மனதில் கெட்டியமாக பிடித்த ஆதித்யா.

அமெரிக்க குழந்தைகளுக்கு உயர்தரமான கல்வி கிடைப்பது மிக சாதாரண விஷயம். எனவே கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பயணிக்க தொடங்கினார் ஆதித்யா. காலத்தை வீணடிக்காமல் தன் நண்பர்கள் நிகில் தேவராஜ் மற்றும் அனிருத்துடன் இணைந்து எஜூகேஷனிஸ்ட் டியூடரிங் சர்வீஸைக்  (Educationist tutoring service)  கடந்த மே மாதத்தில் தொடங்கினார். இந்த சேவையை ஒரு அரசு சாரா லாப நோக்கற்ற அமைப்பாக உருவாக்கி இலவசமாக ஆன்லைன் வழியாக டியூஷன் சேவை வழங்கி வருகிறார்கள். தற்போது இந்தியாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆதித்யா தலைமையிலான குழுவினர் பாடம் எடுத்தனர். இதனை பார்த்து ஊக்கம் பெற்ற அமெரிக்காவிலுள்ள பல இந்திய மாணவர்களும் ஆதித்யாவின் குழுவில் இணைந்து சேவை செய்ய தயாராகினர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்களும் தன்னார்வலர்களாக இணைந்து ஆன்லைனில் இந்திய மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கின்றனர்.


இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல், கணிதம், அடிப்படை கம்ப்யூட்டர் கோடிங், செஸ் விளையாட்டு ஆகிய பாடங்கள் நவீன தொழில்நுட்ப முறைப்படி தரமாக ஆதித்யா குழுவினரால் கற்பிக்கப்படுகிறது. மாணவர்களுக்குப் புரியும் வரையில் ஒவ்வொரு கான்செப்ட்டும் பொறுமையாகவும், உற்சாகத்துடனும் அமெரிக்க வாழ் மாணவர்கள் பாடம் எடுக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பும் 35 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது. பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கியிருக்கும், ஏராளமான குழந்தைகள் புதிய விஷயங்களை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். நம் குழந்தைகள் அமெரிக்கா சென்று படிக்க முடியவில்லை என்றாலும், அங்கு கற்பிக்கப்படும் பாடங்களை தெரிந்துகொள்கின்றனர் என மகிழ்ச்சியடைகின்றனர் இந்திய மாணவர்கள் பெற்றோர்கள். எங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்ற கல்வி நாயகன் ஆதித்யா தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து கல்வி கற்றுக்கொடுக்க விரும்புபவர்களும், இந்தியாவில் கல்வியை கற்க விரும்புபவர்களும் httpseducationisttutoring.org, educationisttutoring@gmail.com. மேற்கண்ட இமெயில் மற்றும் வலைதளத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆதித்யா  அறிவித்துள்ளார்.