இந்திய அமெரிக்க வாக்காளர்களை கவர ட்ரம்பின் பரப்புரை வீடியோவில் மோடியின் உரை!

Trump- Modi

செல்வாக்குமிக்க இந்திய அமெரிக்க வாக்காளர்களை கவர்வதற்காக ட்ரம்பின் தேர்தல் பரப்புரை வீடியோவில் பிரதமர் மோடியின் உரைகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

Trump- Modi

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் ட்ரம்பின் பிரசார குழு வெளியிட்டுள்ள வீடியோவில் கடந்த ஆண்டு ஹூஸ்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும் ஒரே மேடையில் பங்கேற்று பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல , பிப்ரவரி மாதத்தில் ட்ரம்ப் அகமதாபாத்திற்கு பயணம் மேற்கொண்டது, அந்த கூட்டத்தில் மோடியும் ட்ரம்பும் உரையாற்றிய காட்சிகளும் வீடியோவில் இடம்பிடித்துள்ளன.மேலும் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அமெரிக்காவில் ஹூஸ்டன் மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வீடியோவையும் வெளியிட்டு குடியரசுக் கட்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறது.