சிறப்பாக நிர்வாகம் செய்வதால் நானே மீண்டும் அதிபர் ஆவேன்: ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

trump

இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவிவரும் சூழலில், நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் நானே மீண்டும் வெற்றி பெறுவேன் என அதிபர் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “இதுவரை நான் சிறப்பான முறையில் ஆட்சி செய்துள்ளேன். இதற்கு முன்னர் எவரும் செய்யாத பல சாதனைகளை நான் செய்துள்ளேன். தேர்தலில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு முடிவுகள் வெளிவரப்போகின்றன. 2016ஆம் ஆண்டு நடந்ததுபோலவே மீண்டும் நானே வெற்றி பெறுவேன். வெற்றிப்பெற்றவுடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன், அதன்மூலம் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமெரிக்காவை மாற்றுவேன்” எனக்கூறியுள்ளார்.