முடிவுக்கு வந்தது ட்ரம்பின் சகாப்தம்

ட்ரம்ப்…. கடந்த நான்கு ஆண்டுகளாக உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர்.

2016 ஆம் ஆண்டில் அமெரிக்க தேர்தல் களத்தில் குதித்ததில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கி, அதன் மூலம் வெற்றிப்படிகளை தனக்கென தகவமைத்துக் கொண்ட புத்திசாலி மனிதர்…

‘அமெரிக்கா- அமெரிக்கர்களுக்கே’ என பழமைவாத கொள்கைகளை முன்நிறுத்தினாலும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ட்ரம்புக்கே வெற்றி கிடைத்தது.

இதனால் சர்ச்சைகளையும் தனக்கு சாதகமாக மாற்றும் சாதனை நாயகனாக உருவானார் ட்ரம்ப்…

அதிபராக அவர் பதவியேற்றது முதல் எடுத்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அதிரடி ரகம்… வெள்ளை மாளிகையில் நுழைந்த உடனேயே குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

அடுத்த அதிர்ச்சியாக குடியுரிமை விவகாரங்களிலும் பெரும் மாற்றங்கள் கொண்டு வந்தார்.

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைபவர்களை தடுக்க, எல்லையில் மிகப் பெரிய சுவர் எழுப்பப்போவதாக அறிவித்தார்.

அந்தத் திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை முழுமை அடையவில்லை. தற்போதைய நிலவரப்படி குட்டி சுவராகவே அந்த திட்டம் எழும்பியிருக்கிறது.

ஒபாமா அதிபராக இருந்தபோது ஈரானுடன் நட்பு பாராட்டுவதற்காக, அந்நாட்டுடன் அணு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால் ட்ரம்ப் அதிபரானதும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், ஈரான் மீதான தடைகளையும் இறுக்கினார்.

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே என்ற தமது கொள்கையை நிலைநாட்டவும், அமெரிக்கர்கள் உளவு பார்க்கப்படுவதை நிறுத்தவும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழ வைப்பதற்காக சீனப் பொருட்களுக்கு தடை விதித்தார்.

இதனால், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டது.

முந்தைய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டில் இருந்து இப்படி நேர் எதிராக பயணித்த ட்ரம்ப், வடகொரியா விவகாரத்திலும், உலகமே எதிர்பாராத முடிவுகளை எடுத்தார்.

அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை முதல் முறையாக சந்தித்து, இரு நாட்டுக்கும் இடையிலான நீண்ட கால கசப்புணர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சர்வதேச நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இரு துருவங்களாக இருந்த வடகொரியாவும், தென்கொரியாவும் போரை மறந்து அமைதியை காப்பதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற அளவுக்கு ட்ரம்புக்கு புகழ் மாலை விழத் தொடங்கியது.

சீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த அதே வேளையில், இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுடன் நட்புறவை வளர்க்க ஆரம்பித்தார் ட்ரம்ப்.

குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்களை தன் பக்கம் வளைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு அழைத்தார்.

இதற்காக நடத்தப்பட்ட ஹவுடி மோடி நிகழ்ச்சி இன்றளவும் பெரிதாக பேசப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவின் செல்வாக்கை ஆழமாக பதிக்க நினைத்தார்.

இதற்காக இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே முடிவுக்கு வராமல் இருக்கும் ஜெருசலேம் பிரச்னையை கையில் எடுத்தார். ஜெருசலேம் இஸ்ரேலுக்கு தான் சொந்தமாக வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, அங்கு அமெரிக்க தூதரகத்தை நிறுவினார்.

தங்கள் நாட்டின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்த தூதரக திறப்பு விழாவில் தனது மகள் இவாங்காவையும் அனுப்பி வைத்தார் ட்ரம்ப்…

அமெரிக்கா சிறந்த நாடு என அவ்வப்போது கூறிக் கொள்ளும் ட்ரம்ப், அதற்காக எந்தவொரு பணியையும் சிறப்பாக மேற்கொள்ளவில்லை என்பது தான் தற்போதைய ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

அதற்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அவரது நிர்வாகம் சரிவை சந்தித்ததே மிகப் பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது…

நான்கு ஆண்டுகளில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுத்தாலும், ட்ரம்ப் சர்ச்சையின் நாயகன் தான் என்பதை தொடர்ந்து ஆணித்தரமாக நிரூபித்து வருகிறார்.

பிரதமர் மோடியுடன் சிறப்பான முறையில் நட்பு பாராட்டிய ட்ரம்ப், அவரது அழைப்பின் பேரில் இந்தியா வந்தபோது ஆக்ராவின் தாஜ்மஹாலையும், குஜராத்தில் வழங்கப்பட்ட வரவேற்பையும் கண்டு மெய்சிலிர்த்தார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகிறார் பைடன்