அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசரகால ஒப்புதல்!

plasma treatment

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 57 லட்சத்துக்கும் மேர்பட்டோருக்கு 95 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஃபுளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது.

plasma treatment

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். இம்முறைப்படி பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டோரின் உடலினுள் செலுத்தும்போது நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா தொற்றை எதிர்த்து போரிடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிளாஸ்மா சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது என்பதும் ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்புவிகிதம் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ‘ சீன வைரஸை கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை ஒரு சக்திவாய்ந்த சிகிச்சை. கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அமெரிக்கர்கள், பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.