ஹெச்1 பி விசாவுக்கு செல்வோர் ஓராண்டு மட்டுமே பணிபுரியும் வகையில் புதிய கெடுபுடி!

தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் வேலைக்காக அமெரிக்கா செல்வோர் அதிகபட்சம் ஓராண்டுக்கு மட்டுமே பணியாற்றக்கூடிய வகையில் ஹெச் 1 விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் பயன்படுத்தும் ஹெச்1பி விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

இதனால் பல இந்திய குடும்பங்கள் தத்தளிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையில் கொரோனா வைரஸ் நெருக்கடி வேற, இந்த ஆண்டு முழுவதும் வேலைக்கு செல்ல முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது.

அதன்பிறகு சென்றால் வேலை இருக்குமோ இருக்காதோ என்ற அச்சம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் தோன்றுகிறது.

இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வேலை, நிதி பிரச்னை, சுகாதார அச்சுறுத்தல் இப்படி பல பிரச்னைகளால் சிக்கித்தவித்துவருகின்றன.

இதனிடையே அமெரிக்காவில் சுமார் 6 லட்சம் பேர் ஹெச் 1பி விசா மூலம் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவும், கனடாவைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்வோரின் பணிக்காலம் மூன்றாண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெச்1 பி விசா பெற்று பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊதியமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்தும் கூகுள், ஆப்பிள், பேஸ்புக், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிகிறது. நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ட்ரம்ப் அரசின் இந்த உத்தரவுகளுக்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே:  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நாட்டுப்புற நிகழ்ச்சி! 10 ஆம் தேதி 10 மணிக்கு!!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter