அமெரிக்காவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க புறப்பட்ட 36 விமானங்கள்!

அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா இயக்கும் விமான சேவைக்கு அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை கடந்த மாதம் தடை விதித்தது. ஏர் இந்தியா நிறுவனம், நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமானசேவையை துவக்குவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த தடைஉத்தரவு, 30 நாட்கள் அமலில் இருக்கும் என்பதால் அங்கு தவித்து வரும் இந்தியர்களை மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக தாய்நாட்டிற்கு அழைத்துவரும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. இக்கட்டான சூழலிலும் ஏர் இந்தியா இலவச சேவையையே வழங்கியிருக்க வேண்டும், பயணிகளிடமிருந்தே கட்டணம் வசூலிப்பது விமான பயண நெறிமுறைகளுக்கு எதிரானது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியட்க்ய். மேலும் இந்த தடை உத்தரவு குறித்து மே மாதமே இந்தியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் இந்த விவகாரத்தில் உடனடி முடிவெடுக்க இந்திய அரசு விரும்பவில்லை என்பது புலப்படுவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.

Air india

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வரும் 11ஆம் தேதி முதல் இந்தியா அமெரிக்கா இடையே விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் பதிவு ஏர் இந்தியா இணையதளத்தில் 6ஆம் தேதி இரவு 8 மணி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல நியூயார்க்கில் 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கும், சிகாகோவில் காலை 9.30 மணிக்கும் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.இரு வழிதடத்திலும் 11ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை மொத்தம் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஏர் இந்தியா இயக்கும் விமான சேவைக்கு அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை தற்போது அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடதக்கது.