கொட்டும் மழையில் நடனத்துடன் பரப்புரை மேற்கொண்ட கமலா ஹாரிஸ்!

kamala harris

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தேர்தல் பரப்புரையின் போது உற்சாகத்தில் மழையில் நடனமாடினார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக அவரது மகன் ஜூனியர் ட்ரம்ப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அதேபோல் ஜோ பிடனுக்காக ஒபாமா வாக்கு சேகரிக்கவிருக்கிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் என்ற இடத்தில் கொட்டும் மழையின்போது, குடையைப் பிடித்தவாறே அவர் உரையாற்றினார். ஒரு கட்டத்தில் மழையை ரசித்துக் கொண்டே நளினமாக ஆடத் தொடங்கினார் கமலா. இந்தக் காட்சிகள் அவரது ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது‌. மேலும் மழையில் தாம் நடனமாடும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், வெயிலோ மழையோ, ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:  நாளை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதி விவாதம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter