டிக்டாக்கை வாங்கினால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கே பாதிப்பு: பில்கேட்ஸ்

இந்தியா- சீனா இடையிலான மோதலை தொடர்ந்து சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. பயனர்களின் தகவல்களை சீனா திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது. இதனால் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு நாடுகளில் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டது.

டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனமாக மாற்றினால் இழந்த வருவாயையும், நம்பக தன்மையை டிக்டாக் மீண்டும் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்க அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் உறுதிப்பட தெரிவித்தார். இதனால், இறுதி கட்டத்தை எட்டிய மைக்ரோசாப்ட் – பைட்டான்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tiktok

இந்நிலையில் டிக்டாக்குடன் ஒப்பந்தம் செய்வது மைக்ராசாப்ட் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டிக்டாக்கை விற்பது குறித்து அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் உடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இந்த ஒப்பந்தம் ஒரு விஷ கோப்பை என்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தை நிர்வகிப்பது அத்தனை எளியகாரியமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கிய குழந்தைகளை உயிரைக்கொடுத்து காப்பாற்றிய வாலிபர்!