கொரோனா உச்சத்துக்கு நடுவே அமெரிக்காவில் பள்ளியை திறக்க வலியுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 30 லட்சத்து 97 ஆயிரத்து 538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும் வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

school

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் பெரிதும் அதிகரித்துவரும் நிலையிலும், பள்ளிகளை திறக்க மாநில ஆளுநர்களுக்கு அழுத்தம் தரப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் இதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், அரசியல் காரணங்களுக்காக சிலர் பள்ளிகளை மூடியிருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். இதனால் அனைத்து பள்ளிகளையும் திறக்குமாறு ஆளுநர்களுக்கு அழுத்தம் தரப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்துவரும் வேளையில் கல்வியாண்டு பாடங்கள் குறித்த சவால் நீடிக்கிறது. ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளியை அதிகரிப்பதாக வல்லுநர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால் தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்படும் அமெரிக்காவில் குறிப்பாக, இளைய வயதினர் அதிகம் பாதிக்கப்படும் சூழலில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.