விசா கட்டுப்பாட்டினால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பில்லை! எங்களின் டார்கெட் சீனா தான் -அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரும் செமஸ்டரில் ஆன்லைனில் மட்டுமே கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை அறிவித்தது. இதனைக்கேட்ட மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமெரிக்காவுக்கு பிள்ளைகளை படிக்க அனுப்பிய பெற்றோர்களும் செய்வதறியாது திணறினர். அமெரிக்காவின் இந்த திடீர் உத்தரவால் சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்களும், 4 லட்சம் சீன மாணவர்களும் பாதிக்கப்படுவர் என கூறப்பட்டது.

harsh vardhan shringla

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டேவிட் ஹலேவுடன் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சீனா விவகாரம், மாணவர்களுக்கான எப்1 விசா தடை, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவை திரும்பப்பெறும் அமெரிக்காவின் முடிவு கவலையளிப்பதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த டேவிட் ஹலே, இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விசா கட்டுப்பாட்டில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், இருதரப்புக்கும் பயன் தரக்கூடியவகையில் விசா வழங்குதல் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் இது தற்காலிகமான முடிவுதான் என்றும் டேவிட் ஹலே தெரிவித்தார். அமெரிக்காவிலிருந்து விரட்டியடிக்கப்படுவோமோ என பயந்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு கொஞ்சம் ஆறுதல் கூடிய வகையில் உள்ளது.