இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் சீன செயலிகளுக்கு தடையா?

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இரு நாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்ததையடுத்து அமெரிக்காவிலும் அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் சீனா மீது கடுங்கோபத்திலுள்ள அதிபர் ட்ரம்ப்,தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதன் கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் சூழலில், அமெரிக்கா மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளது. மக்களால் காண முடிவதை தன்னால் உணர முடிகிறது” என தெரிவித்துள்ளார். இதனிடையே சீன செயலிகளைத் தடை செய்த இந்தியாவின் முடிவை வரவேற்பதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மேம்படும் எனவும் பாம்ப்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரைன்,‘‘சீன அரசு, சொந்த காரணங்களுக்காகவே டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் 4 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்திவருகின்றனர். அவர்களில் சிலர் குழந்தைகள், பலர் இளைஞர்கள். டிக் டாக் செயலியில் சீன கொள்கைகளை விமர்சிப்பவர்களின் கணக்குகள் உடனடியாக நீக்கப்படுகின்றன ஏற்கெனவே அமெரிக்க காங்கிரஸில் ஃபெடரல் அரசு ஊழியர்கள் டிக் டாக் பயன்படுத்துவதை தடை செய்வதற்கான மசோதா நிலுவையில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டிருப்பதை அடுத்து அமெரிக்காவிலும் தடை செய்தால் என்ன என்ற நிலைப்பாடு அதிகரித்துள்ளது’’ என தெரிவித்தார்.

டிக்டாக் செயலி ஊடுருவலில் ஈடுபடுவதாக போர்பஸ் இதழும் தெரிவித்துள்ளது. மேலும் பயனாளிகளின் தரவுகளை சீனாவுக்கு அனுப்புவதாகவும், பயனாளிகள் பயன்படுத்தும் பிற செயலிகளின் விவரங்கள் மற்றும் மொபைலில் உள்ள புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை டிக் டாக் கண்காணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.