அமெரிக்கா சார்ந்த நிறுவனங்கள் வாங்கவில்லையெனில் டிக் டாக்கிற்கு தடை- ட்ரம்ப்

டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த நிறுவனங்கள் ஏதேனும் வாங்கவில்லை எனில், அச்செயலி வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டிக்டாக்கை வாங்க அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயலதிகாரியான சத்ய நாதெல்லாவுடன் டிக் டாக்கை வாங்குவது தொடர்பாக ஆலோசித்ததாக கூறினார். அப்போது செயலின் 30 சதவீதத்தை மட்டும் வாங்குவதை விட, நூறு சதவீதத்தையுமே வாங்க மைக்ரோசாஃப்ட் முனைப்பு காட்ட வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறினார். மேலும் டிக் டாக்கை வாங்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும், ஒப்பந்தம் முடிந்த பின்னர் கணிசமான தொகையை அமெரிக்கா அரசு கரூவூலத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். நில உரிமையாளர் மற்றும் குத்தைதாரர் ஆகியோருக்கிடையிலான ஒப்பந்தம் போலத்தான் இதுவுமென ட்ரம்ப் உதாரணம் காட்டியுள்ளார். மேலும் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்கா சார்ந்த நிறுவனங்கள் டிக் டாக்கை வாங்காத பட்சத்தில் அந்தச் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என ட்ரம்ப் அழுத்தமாக கூறியுள்ளார்.

டிக் டாக்கை அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனங்கள் வாங்க வேண்டும் என ட்ரம்ப் கூறி வரும் நிலையில், டிக் டாக் அதன் தலைமையிடத்தை பிரிட்டனில் நிறுவ பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்த வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட பிரிட்டன் அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வயது முதிர்வால் அவதிப்பட்ட இரு சிங்கங்கள் கருணைக்கொலை!