அமெரிக்கா- இந்தியா உடனான உறவு எப்படி உள்ளது?

Trump- Modi

அமெரிக்கா என்றாலே அது ஒரு கனவு உலகம் என்ற கருத்தாக்கம் இந்தியாவில் உண்டு, அந்த கனவு நாட்டுடன் இந்தியாவின் வர்த்தக வரலாறு எப்படி இருக்கிறது.

1990களின் தொடக்கத்தில் தாராளமயமாக்கல்…தனியார் மயமாக்கல்…உலக மயமாக்கல் என்ற தாரகமந்திரங்களுடன் உலக நாடுகளுக்கு தங்கள் பிரமாண்டமான சந்தையை திறந்தது இந்தியா.

இதைத் தொடர்ந்து உலக வல்லரசான அமெரிக்கா இந்தியாவில் பெரிய அளவில் கால் பதித்தது.

புகழ் மிக்க அமெரிக்க பிராண்டு பொருட்கள் இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்க, மறுபுறம் இந்திய இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப சேவை அமெரிக்கர்களின் வாழ்க்கையை வழிநடத்தும் அளவுக்கு மாறியது.

இதன் பலனாக 1999இல் ஆயிரத்து 600 கோடி டாலர்களாக இருந்த இரு நாட்டு வர்த்தத்தின் மதிப்பு 2019இல் 14 ஆயிரத்து 900 கோடி டாலர்களாக உயர்ந்தது.

எனினும் இரு நாட்டு வர்த்தக உறவுகள் அண்மைக்காலமாக உரசல்கள் மிகுந்ததாகவே மாறி வருகிறது.

india- america

தங்கள் பொருட்களுக்கு இந்தியா அதிகமாக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார். இதோடு நிறுத்திக் கொள்ளவில்லை ட்ரம்ப். 40 ஆண்டுகளாக இந்தியாவுக்கு GENERAL SYSTEMS OF PREFERENCES என்ற பெயரில் அளித்து வந்த வரிச் சலுகையை அடியோடு நிறுத்தினார் ட்ரம்ப்.

இதனால் அமெரிக்காவிற்கு பல பொருட்களை இந்தியாவில் இருந்து வரியின்றி ஏற்றுமதி செய்யும் நிலை முடிவுக்கு வந்தது. இது இந்திய தொழிற்துறையை கணிசமாக பாதித்தது. இந்தியாவில் இருந்து இரும்பு, அலுமினியம் போன்ற பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா வரி விதித்தது.

இதற்கு பதிலடியாக பாதாம், ஆப்பிள் என அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 28 வகையான பொருட்களுக்கு வரி விதித்தது இந்தியா. இந்த வர்த்தக யுத்தத்தின் அடுத்தகட்டமாக எச்1பி விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா.

பல்லாயிரக்கணக்கான இந்திய இளைஞர்களின் அமெரிக்க வேலை கனவில் இது இடியாக இறங்கியது. இந்த கட்டுப்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த போதும் அமெரிக்கா இன்னும் இறங்கிவரவில்லை.

கூர்ந்து கவனித்தால் இரு நாட்டு அரசுகளும் தத்தமது மக்கள் நலன், தொழிற் துறையின் நலன் கருதியே இந்த முட்டல் மோதலில் ஈடுபட்டுள்ளது தெரியவரும். ஆனால் சீனாவின் வல்லாதிக்கும் பெருகியுள்ள இச்சூழல் இந்தியாவுடன் நல்லுறவை பேணியாக வேண்டிய கட்டாயத்தை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தியுள்ளது.

உலகின் உற்பத்தி ஆலையாக திகழும் சீனாவிற்கு சரியான மாற்று இந்தியாதான் என கருதும் அமெரிக்கா அதற்கேற்ப உறவுகளை வலுப்படுத்த தொடங்கியுள்ளது. இரு நாட்டு உறவுகள் இதே பாதையில் செல்லுமா? அல்லது திருப்பம் நேருமா என்பது நவம்பர் 3ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிக்கலாமே:  பிடன் மீதான ஊழல்களை ஊடகங்கள் மறைக்கின்றன- ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter